தங்கரதம் விமர்சனம்
thangaratham-poster
இயக்குனர் ஜெகனின் உதவியாளர் பாலமுருகன் இயக்கத்தில் வெற்றி, அதிதி கிருஷ்ணா, சௌந்தர் ராஜா நடித்து வெளிவந்திருக்கும் படம் தங்கரதம்.

ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டிற்கு காய்கறி எடுத்துச் செல்லும் டெம்போ ஓட்டுகிறார்கள் கதாநாயகன் செல்வா (வெற்றி) மற்றும் பரமன் (சௌந்தர் ராஜா) இருவரும். இவர்கள் இருவருக்கும் டெம்போ ஓட்டுவதில் அடிக்கடி சின்னச் சின்ன மோதல்கள் வந்து போகின்றன. பரமனின் தங்கை ஆனந்தியும் (அதிதி கிருஷ்ணா) வெற்றியும் மனதார காதலிக்கின்றனர். இந்நிலையில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் செய்யும் ஒரு செயலின் பழியானது செல்வா மீது வந்து விழுகிறது. இதனால் பரமன் செல்வாவை போட்டுத் தள்ளும் வெறியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான். இதனால் செல்வா உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்து கொள்ளும் செல்வாவின் சித்தப்பா அண்ணாதுரை (ஆடுகளம் நரேன்) செல்வாவுக்கு ஏதும் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தனது மகனுக்கு அதிதி கிருஷ்ணாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். பின்பு, இது பற்றி வெற்றிக்கு தெரிய வர, அவன் என்ன முடிவெடுக்கிறார் என்பது தங்கரதம் படத்தின் மீதி கதை.

குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை போன்ற விஷயங்களுடன் ரசிக்கும்படி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், லொள்ளுசபா சாமிநாதன் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் ரொம்பவே ரசிக்க வைக்கின்றன.

சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி இந்தப் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் மனதை ஈர்க்கிறார். இரண்டாவது கதாநாயகன் போன்றும் வில்லன் கேரக்டர் போன்றதுமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சௌந்தர் ராஜா. கேரக்டருக்கு என்ன தேவையோ அதற்கேற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கிறார் அதிதி கிருஷ்ணா. அழகிலும் நடிப்பிலும் ரசிகர்களை கவர்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளு சபா சாமி நாதன் இருவரையும் காமெடிக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அதே நேரத்தில் கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமும் நான் கடவுள் ராஜேந்திரன்தான். வெற்றியின் நண்பராக நடித்திருக்கும் ராண்டில்யா, சௌந்தர்ராஜாவின் உதவியாளர் வெள்ள புறாவாக வரும் பாண்டியன் இருவரின் கதாபாத்திரமும் நடிப்பும் பாராட்டுக்குரியது.

ஆர்.ஜேக்கப்பின் ஒளிப்பதிவில் கிராமத்தையும் நகரத்தையும் ரொம்பவே அழகாக காட்டியிருக்கிறார்கள். டோனி பிரிட்டோவின் இசையில் பின்னணி இசை காட்சிகளுக்கு பக்க பலமாக இருக்கின்றன. அன்பே என்று சொல்லப் போறேன் மெலடிப் பாடல் ரசிக்க வைக்கிறது. ராஜேந்திரனை மையப்படுத்திய மொட்டத்தல மச்சானுக்கு பாடல் தாளம் போட வைக்கும் ரகம்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். எதார்த்தமான வாழ்வியல் பேசும் படமாக தங்கரதம் இருக்கிறது.