ரங்கூன் விமர்சனம்
Rangoon-poster
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சனா நடித்து வெளியாகியிருக்கும் படம் ரங்கூன்.

பர்மாவிலிருந்து அகதியாக சென்னைக்கு வருகிறது கௌதம் கார்த்திக்கின் குடும்பம். தனது சிறிய வயதிலேயே விபத்து ஒன்றில் தந்தையை பறிகொடுக்கிறார். வளர்ந்த பிறகு வேலையில்லாமல் இருக்கும் இவர் ஒரு கட்டத்தில் சித்திக்கிடம் வேலைக்கு சேருகிறார். வேலையில் இவரது ஆர்வத்தைப் பார்த்த சித்திக் தனது கடையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கௌதம் கார்த்திக்கிடம் கொடுக்கிறார். இந்நிலையில் சித்திக் தான் செட்டில் ஆகிவிடும் எண்ணத்தில் வெளிநாட்டில் இருந்து பர்மாவுக்கு தங்கத்தை கடத்திச் சென்று விற்கும் பொறுப்பை கௌதம் கார்த்திக்கிடம் கொடுக்கிறார். கடத்தல் தங்கத்துடன் ரங்கூனுக்கு பயணப்படும் கௌதம் கார்த்திக் தங்கத்தை விற்று 6 கோடி பணத்துடன் சென்னைக்க கிளம்புகிறார். வரும் வழியில் பணம் காணமல் போகிறது. அதனால் வருகிற பிரச்சினைகளை எப்படி அவர் எதிர்கொண்டார் என்பது மீதி கதை.

தங்கம் கடத்தும் கதைதான் என்றாலும் சென்னையில் இருந்து பர்மாவுக்கு தங்கம் கடத்துவதை சுவாரஸ்யமான காட்சிகளுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.

கௌதம் கார்த்திக் நடித்து வெளிவந்த படங்களில் இந்த படத்தில்தான் உருப்படியான நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கதாநாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் சனா கொள்ளை அழகு. இவரது சிரிப்பில் ரசிகர்கள் கவிழ்ந்து விடுவார்கள். நடிக்க பெரிதாக வாய்ப்பு இல்லை என்றாலும் தான் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு போகிறார். சித்திக் இயல்பாக நடித்திருக்கிறார். கௌதம் கார்த்திக்கின் நண்பர்களாக நடித்திருக்கும் டானியல் அன்னி பாப், லல்லு இருதுவருமே தங்கள் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ரங்கூனின் அழகை இம்மியும் பிசகாமல் படம் பிடித்திருக்கிறது அனிஷ் தருண்குமாரின் கேமிரா. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சண்டை காட்சிகளும் ரசிக்கும்படியானதாக இருக்கின்றன. படத்தை இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. ஹவாலா பணம், தங்கம் கடத்தல் பின்னணியில் சுவாரஸ்யமான காட்சிகளுடன் ரங்கூன் படத்தை உருவாகியிருக்கிறார் இயக்குநர்.