ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம்

Oru-Kidayin-Karunai-Manu

காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டனின் உதவியாளர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் ஒரு கிடாயின் கருணை மனு. சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுக்களையும் பெற்ற படம் இது. ஒரு கிடாயின் கருணை மனு படம் எப்படித்தான் இருக்கிறது.

ராமமூர்த்தி, சீதா ரெண்டு பேரும் புதுசா கல்யாணம் பண்ணிக்கிட் ஜோடி. விதார்த்துக்கு கல்யாணம் சிறப்பா முடிஞ்சிட்டா குலதெய்வம் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு நடத்திடுவேன் எனும் ராமமூர்த்தி பாட்டியின் வேண்டுதலின் படி கிடா வெட்டி பொங்கலிட கிளம்புகிறார்கள் ராமமூர்த்தி சீமா மற்றும் நெருங்கிய உறவுக்காரர்கள் நண்பர்கள். வாடகை லாரியில் சுமார் 50 பேருடன் பயணிக்கின்றனர். அந்த லாரி தரிசு நிலத்தில் சென்று கொண்டிருக்கும்போது, லாரியின் குறுக்கே ஒரு இளைஞன் வந்து விழுந்து உயிரை விடுகிறான். இந்த விபத்தின் போது வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவர் ராமமூர்த்தி. மனைவி ஆசைப்பட்டாள் என்பதற்காக லாரி ஓட்டப் போய் இப்போது பிரச்சினையில் சிக்கிக் கொண்டான். அந்த இளைஞனை அப்படியே அங்கேயே போட்டுவிட்டுப் போனால் ஏதாவது பிரச்சினை வந்து சேரும் என நினைக்கும் அவர்கள் அனைவரும் அந்த பிணத்தை புதைத்துவிட்டு சென்றுவிடுவது என்று முடிவு செய்கிறார்கள்… அதைத் தொடர்ந்து அந்த தரிசு நிலக் காட்டில் அவர்கள் அனைவரும் தங்கிக் கொண்டு அந்த பிணத்தை புதைத்துவிட்டு சென்றார்களா? காவல்துறைக்கு தகவல் தெரிந்ததா? என்ன நடந்தது என்பது மீதி கதை.

மனதுக்கும் வாழ்க்கைக்கும் மிக நெருக்கமான படங்கள் எப்போதாவது தான் தமிழ் சினிமாவில் வருகின்றது. அப்படி ஓர் படம்தான் ஒரு கிடாயின் கருணை மனு. நல்ல ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதனை கிராமத்துப் பின்னணியில் அழகான திரைக்கதையாக்கி, கதாபத்திரங்களுக்கு பொருந்துகிற நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். இதனால் படம் சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமான இருக்கிறது.

படத்தின் கதாநாயகனாக ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விதார்த், கதாநாயகியாக சீதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் புதுமுகம் ரவீணா, இவருக்கு அப்பாவாக நடித்திருக்கும் ஜெயராஜ், சமையல்காரராக வரும் ‘சித்தன்’ மோகன், விதார்த்தின் நண்பன் ‘கொண்டி’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆறுமுகம், லாரி ஓட்டுனராக நடித்திருக்கும் வீரசமர், லாரி உரிமையாளராக நடித்திருக்கும் செல்வமுருகன், அரும்பாடு கதாபாத்தில் நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் உட்பட அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் ரகுராம். பாடல்களிலும் பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கிறார். ஒளிப்பதிவு சரண். படத்திற்கு காட்சிக்கு தேவையான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார். சிறப்பான படத்தொகுப்பை செய்திருக்கிறார் கே.எல்.பிரவீன். படத்தின் துவக்கக் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாதவாறு காட்சிகளை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். வித்தியாசமான கதைக் களத்தில் சுரேஷ் சங்கையா இயக்கியிருக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ வணிக படங்களுக்கு நடுவே பூத்த ஓர் வாழ்வியல் யதார்த்த சினிமா. நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.