ஒரு இயக்குநரின் காதல் டைரி விமர்சனம்

கடவுள், புரட்சிக்காரன், ஒரு காதல் கதை என பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் வேலு பிரபாகரன் இயக்கி நடித்திருக்கும் படம் ஒரு இயக்குநரின் காதல் டைரி விமர்சனம். பொன் சுவாதி இந்தப் படத்தில் அவருடன் நடித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பதும் வேலு பிரபாகரன்தான்.

பெண்கள் மீதான கவர்ச்சியை மூடி மூடி மறைப்பதன் காரணமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று சொல்லி படத்தின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார் வேலு பிரபாகரன்.

தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் வேலு பிரபாகரன் பொன் சுவாதியை கதாநாயகியாக வைத்து படத்தை எடுக்க ஆரம்பிக்கிறார். பொன் சுவாதி பார்க்க அச்சு அசலாக தனது காதலி போன்றே இருக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்க ஒரு கட்டத்தில் பொன்சுவாதி இயக்குநரின் மீது பாலியல் புகார் கொடுக்கிறார். ஏன் அந்த புகாரை அவர் மீது கொடுத்தார்… அந்த புகாரை வேலு பிரபாகரன் எப்படி எதிர்கொண்டார் என்பதாக விரிகிறது கதை.

படத்தில் இயக்குநராக நடித்திருக்கும் வேலு பிரபாகரன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை குறையவும் இல்லாமல் அதிகமும் இல்லாமல் வழங்கியிருக்கிறார். இளமை, முதுமை என இரு தோற்றங்களில் வருகிறார் வேலு பிரபாகரன். படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் பொன்சுவாதி சற்றே கவர்ச்சியாக ஆனால் கதைக்கு தேவைப்படுகிற அளவில் நடித்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் பரத நாட்டிய கலைஞர், சிறு வயது வேலு பிரபாகரன் கதாபாத்திரம் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்றார் போல் அமைந்திருக்கின்றன. மணிவண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு. தைரியமாக இது போன்ற கதைக் களத்தை எடுத்து துணிச்சலாக படமாக்கி வெளியிட்ட வேலுபிரபாகரனுக்கு பாராட்டுக்கள்.