முன்னோடி விமர்சனம்

munnodi-poster

அறிமுக இயக்குனர் குமார் இயக்கத்தில் ஹரீஷ், யாமினி பாஸ்கர், அர்ஜூனா நடித்து வெளிவந்திருக்கும் படம் முன்னோடி.

சத்யா (ஹரீஷ்) தாதா மந்திரமூர்த்தியிடம் (அர்ஜுனா) வேலை பார்க்கிறார். இந்நிலையில் காவல்துறை அதிகாரி சௌந்திரபாண்டியன் (ஷிஜாய் வர்கீஸ்) மந்திரமூர்த்தி சத்யா இருவரையும் என்கவுண்டரில் கணக்கு தீர்க்க கால நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தனது தம்பியின் கல்லூரி தோழியான தேணுகா (யாமினி பாஸ்கர்)வை காதலிக்கிறார் சத்யா. ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தினரைப் பற்றி புரிந்து கொள்ளும் ஹரீஷ் மந்திரமூர்த்தியிடம் இருந்து விலக நினைக்க, மந்திரமூர்த்தியின் மச்சான் ஜெயாவோ, சத்யா போலீஸில் சரணடைந்துவிடுவார் என அவரை போட்டுத்தள்ள திட்டம் போடுகிறார். வில்லன் சூழ்ச்சி, காவல்துறை வேட்டை இவைகளில் இருந்து சத்யா தப்பித்தானா அவன் காதல் என்ன ஆனது என்பது படத்தின் மீதி கதை.

சத்யாவாக நடித்திருக்கிறார் ஹரீஷ். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். மந்திரமூர்த்தியை பார்கக வரும் காவல் அதிகாரி முன்பு சத்யா ரொம்பவே சலம்பும் காட்சிதான் கொஞ்சம் ஓவர். தேணுகாவாக நடித்திருக்கிறார் யாமினி பாஸ்கர். அழகும் நடிப்பும் கொட்டிக் கிடக்கிறது.

‘கங்காரு’ படத்தில் நடித்த அர்ஜுனா, இந்தப்படத்தில் தாதா மந்திரமூர்த்தியாக நடித்திருக்கிறார். ஜெயாவாக நடித்திருக்கும் இயல்பாக எகத்தாளமாக பேசியபடியே நடித்திருக்கிறார். அம்மா காபாத்திரத்தில் நடித்த சித்தாராவும் ஹரீஷின் தம்பியாக நடித்த நடிகர், ஏ.சி.பி சௌந்திரபாண்டியனாக நடித்திருக்கும் நடிகர் ஷிஜாய் வர்கீஸ் அனைவருமே நடிப்பில் முத்திரை பதிக்கிறார்கள். தாதா மந்திரமூர்த்திக்கு மனைவியாக முகம் காட்டியிருக்கிறார் சுஜாவருனி.

இசையமைத்திருக்கிறார் பிரபு ஷங்கர். படத்திற்கு ஒளிப்பதிவு வினோத் ரத்னசாமி. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவையும் இசையையும் வழங்கியிருக்கிறார்கள்.

முட்டகறி மற்றும் அக்கம் பக்கம் இரண்டு பாடல்களுமே செம. அறிமுக இயக்குனர் குமார் கமர்ஷியலாக படமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முதல் படத்திலேயே தேர்ந்த கமர்ஷியல் இயக்குநரைப் போன்று இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர்.