மரகத நாணயம் விமர்சனம்
Maragatha-Naanayam
தமிழில் ஃபேன்டஸி படங்கள் அத்திப் பூத்தார் போன்று எப்போதாவதுதான் வெளிவருகிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் படம் மரகத நாணயம். அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கியிருக்கும் மரகத நாணயம் படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல், அருண்ராஜா காமராஜ், சங்கிலி முருகன், பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சீனாவிலிருந்து வரும் ஆசாமி ஒருவர் மைம் கோபியை சந்தித்து, விலை மதிக்க முடியாத மரகத நாணயத்தை எடுத்துக் கொடுத்தால் 10 கோடி ரூபாய் பணம் தருவதாக சொல்கிறார். மரகத நாணயத்தை தொட்டாலே உயிர் போய்விடும் என்று நம்புகிறபடியால், அந்த மரகத நாணயம் பேரைக் கேட்டதும் பலரும் தெறித்து ஓடுகிறார்கள். இந்நிலையில், ஆதி தனக்கிருக்கும் பணத்தேவையை நிவர்த்தி செய்வதற்காக டேனியலுடன் சேர்ந்து அந்த மரகத நாணயத்தை எடுத்துத் தர சம்மதிக்கிறார். இரும்பொறை அரசனின் ஆவி பாதுகாத்து வைத்திருப்பதாக சொல்லப்படும் மரகத நாணயத்தை ஆதி கைப்பற்றினாரா? நிஜமாகவே மரகத நாணயத்தை தொட்டதும் தொட்டவர்கள் இறந்துவிடுவார்களா? பல பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது மரகத நாணயம்.

படத்தின் துவக்கக் காட்சியிலேயே நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து கதாநாயகன் அறிமுகம், கதாநாயகன் காதல் என அனைத்தும் சாதாரண காட்சிகளாக கடந்து போகின்றன. இடைவேளைக்கு சற்று முன்பு படத்தின் திரைக்கதையில் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் ஒன்று சேர்ந்து கொள்ள இரண்டாம்பாதி முழுக்க காமெடியில் கலகலக்க வைத்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர்.

கதைக்கு என்ன தேவையான நடிப்போ அதை கொடுத்திருக்கிறார் ஆதி. நிக்கி கல்ராணி இதுவரையில் நடித்திராத வகையில் இருக்கிறது இவரது கதாபாத்திரம். இவரது பேச்சும் இவரது குரலும் செம. இந்த கேரக்டரே ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவமாக இருக்கப் போகிறது. முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ் வருகிற காட்சிகள் வெடிச் சிரிப்புக்கு பஞ்சமில்லாதவை. ட்விங்கிள் ராமநாதன் என்னும் தாதா கேரக்டரில் நடித்திருக்கிறார் ஆனந்தராஜ். இவர் வரும் காட்சிகள் மட்டுமின்றி இவரது சீடர்கர் ரேடியோ பெட்டியுடன் என்ட்ரி கொடுக்கும் காட்சிகள் காமெடியில் உச்சம். ஆதியின் நண்பராக நடித்திருக்கிறார் டேனியல். கோட்டா ஸ்ரீனிவாஸ், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, முருகானந்தம் ஆகியோரும் முகம் காட்டியிருக்கிறார்கள்.

பி.வி.சங்கரின் ஒளிப்பதிவும், திபு நினன் தாமஸின் பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுக்கு பக்க பலமாக இருக்கின்றன. ஃபேன்டசி கதையில் நல்ல ஒரு பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் சரவன்.