Despicable Me 3 விமர்சனம்
despicable_me_3
ஹாலிவுட்டில் வில்லன் பிராட்டின் நிகழ்ச்சிகள் திடீரென நிறுத்தப்படுகின்றன. இதனால் கோபப்படும் பிராட், நிஜ வாழ்க்கையில் வில்லனாக மாறுகிறான். பபுள் கம்மை ஆயுதமாக பயன்படுத்தி அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறான். ஆன்ட்டி வில்லன் லீகில் ஏஜென்ட்டாக இருக்கும் க்ரூ மற்றும் அவனது மனைவி லூசி இருவரும் பிராட்டைப் பிடிக்க முயற்சித்து கடைசியில் முடியாமல் போகவே இருவரது சீட்டையும் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். க்ரூவிடம் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மினியன்களும் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளம்புகின்றன. அந்த நேரத்தில் க்ரூவின் சகோதரன் ட்ரூவை சந்திக்க ஆசைப்பட, அவனைப் பார்க்க குடும்பத்தோடு செல்கிறார் க்ரூ. க்ரூவின் சகோதரன் வில்லத்தனமான திட்டம் ஒன்றை சொல்ல அதை செயல்படுத்த இருவரும் இணைந்து களம் இறங்குகிறார்கள். இழந்து போன தன் வேலையைப் பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் வில்லன் பிராட்டுக்கு சவால் விடும் வேலையில் க்ரூ – ட்ரூ சகோதரர்கள் இறங்க முடிவு என்ன என்பது மீதி கதை.

படத்தின் துவக்கத்தில் இருந்தே டெடர் கொடுத்துக் கொண்டிருக்கிறது பிராட் கேரக்டர். பார்ப்பதற்குதான் செம காமெடியாக இவர் இருந்தாலும் பபுள் கம்மை வைத்து இவர் செய்யும் வேலைகள் அனைத்தும் ஜித்து ஜில்லாடி வேலைகள். மொட்டையாக இருந்தால் க்ரூ. நீளமான விக் வைத்துவிட்டால் ட்ரூ என்பதாக இருக்கிறது இருவருடைய கதாபாத்திர உருவ அமைப்புகள். மினியன்ஸின் காட்சிகள் இந்தப் படத்தில் குறைவாகவே இருக்கின்றன. அவைகள் வரும் காட்சிகளில் சிரிக்க முடிகிறது. மினியன்ஸின் சுட்டித்தனங்கள் இன்னும் அதிகமாக இருந்திருந்தால் படம் முழுக்க காமெடியாக இருந்திருக்கும். 3டி காட்சிகள் கண்களை உறுத்தாதவாறு இயல்பாக வந்து போகின்றன.

படத்தை இயக்கியிருக்கிறார்கள் Pierre Coffin மற்றும் Kyle Balda. யுனிவர்சல் பிக்சர்ஸ் இல்லுமினேசன் என்டெர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இந்த படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார்கள்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் படமாக Despicable Me 3 இருக்கிறது.