7 நாட்கள் விமர்சனம்
7 Naatkal Movie Release Posters
சக்தி வாசு, நிகேஷா, அங்கனா நடித்து, சுந்தர்.சி.யின் உதவியாளர் கௌதம்.வி.ஆர். இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் 7 நாட்கள்.

ரேடியோ ஜாக்கி சக்தி வாசுவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகேஷாவும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் எதிர் எதிர் வீட்டில் வசித்து வருகிறார்கள். சக்தி வாசு வளர்க்கும் நாயினால் இருவருக்குமே எதிர் எதிர் துருவங்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இளம் தொழிலதிபரான கோவிந்த் உடன் அறிமுகமான பெண்கள் இருவர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அந்த இரு பெண்களின் மரணத்திற்கும் கோவிந்த் தான் காரணம் அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று ஒரு மர்ம நபர் கோவிந்த் அப்பாவுக்கு போன் செய்து மிரட்டுகிறார். இதனால் திகிலடையும் கோவிந்த் அப்பா தனது வளர்ப்பு மகனை அழைத்து இது சம்பந்தமாய் விசாரிக்க சொல்ல அவர் புலனாய்வில் இறங்க பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய ஆரம்பிக்கின்றன. அவை என்ன என்பது 7 நாட்கள் படத்தின் கதை.

7 நாட்களில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமிரா, ஸ்பை கேமிரா என பல டெக்னிக்கலான பல விஷயங்களை படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சக்தி வாசு, கணேஷ் வெங்கட் ராம், இருவரில் யார் கதாநாயகன் என்கிற கேள்வி எழுகிற வகையில் இருவருக்குமே ரொம்பவே முக்கியமான கதாநாயகன் அளவுக்கான கதாபாத்திரம்தான். கதாநாயகியாக நிகிஷா நடித்திருக்கிறார். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்க்கும் இவருக்கு சக்தி வாசுவுடன் அடிக்கடி சண்டை போடுவதுதான் வேலையாக இருக்கிறது. படத்தின் கதையுடன் ஒன்றி கடைசி வரைக்கும் இவர் பயணிக்கிறார். இன்னொரு நாயகியாக அங்கனா. படத்தில் சில காட்சிகளே வந்தாலும் படத்தின் முக்கியமான கதாபாத்திரம் இவருடையது. காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாசர், தொழிலதிபராக நடித்திருக்கும் பிரபு, அவரது மகனாக நடித்திருக்கும் ராஜீவ் கோவிந்த், சக்தி வாசுவின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி அனைவருமே படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் சக்தி வாசு வீட்டு நாய். படம் முழுக்க இந்த நாய் மைன்ட் வாய்சில் பேசிக் கொண்டிருக்கிறது. நாயின் இந்த பேச்சு வரும் இடங்களில் எல்லாம் கலகலப்புதான்.

விசால் சந்திரசேகர் இசையில் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றார் போல் உள்ளது. ஆனால் பாடல்கள் காட்சிகள் ஈர்க்கின்றனவே தவிர பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. படத்தொகுப்பாளர் ஜஸ்வின் பிரபு இன்னும் கொஞ்சம் எடிட்டி செய்திருந்தால் தேவலை என்பதையும் சில காட்சிகள் உணர்த்துகின்றன. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவில் முத்திரை பதித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் கௌதம்.வி.ஆர். இயக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே தொழில் நுட்பங்களை மையப்படுத்திய க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார். த்ரில்லர் பட விரும்பிகளை கவரும் படமாக 7 நாட்கள் இருக்கும்.